தமிழ் என்ற மொழியின் பெயர் பிடிக்கும். அந்த மொழியில் பேசுவதென்றால் இன்னும் பிடிக்கும். தமிழில் எழுதுவதென்றால் மிக மிகப் பிடிக்கும்.
தமிழில் உள்ள இலக்கியங்களில் திருமுறைகளெல்லாம் எழுதியிருக்கும் முறை என்னை மிகவும் கவர்ந்த விடயம். ஒரே குரல் ஒலி சார்ந்த எழுத்துக்களில் துவங்கி இறைவனைப் போற்றிப் பாடியிருக்கும் நாயன்மார்களின் திறைமையை யோசித்துப் பார்த்தாலே மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அது நிச்சயம் இறைவன் அவர்களுக்குக் கொடுத்த பெருங்கொடை எனத் தான் நான் அதைக் கருதுவேன்.
அதே போல் தான், தமிழராகப் பிறந்து தமிழ் மொழியைப் பேச, வாசிக்க எழுத, புரிந்துகொள்ளத் தெரிந்ததும் இறைவனின் கொடையே. காரணம் தமிழ் மொழி அவ்வளவு அழகு, அதன் இலக்கணமோ அவ்வளவு நுணுக்கமாக இருக்கிறது என்பது தான். அது மட்டும் அல்ல, தமிழ் மொழியில் உள்ள பழைமையான இலக்கணங்களில் பல பல விடயங்கள் உள்ளன. மொழி, கலாச்சாரம், விஞ்ஞானம், இயல், இசை, நாடகம், சமூகவியல், அரசியல் என்று இன்னும் எத்தனையோ விடயங்கள் பற்றி நமது முன்னோர்கள் நமக்கு எழுத்துவடிவில் கொடுத்துள்ளார்கள். இவற்றையெல்லாம் படிக்காமல் நாமெல்லாம் என்ன செய்கிறோமென்று எனக்குத் தெரியவில்லை..
சரி, நாயன்மார்கள் எழுதியது போல் நாம் ஏன் கவிதை வடிவில் ஒரு வெண்பா எழுதக்கூடாது எனத் தோன்றியது. அப்படியான யோசனையால் எழுதியது தான் பின்வரும் கவி. 2007’இல் நானே இறைவனை நினைத்து எழுதியது, மீண்டும் நினைவிற்கு வந்தது.
இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. முதல் பாடலில் ஒவ்வொரு வசனமும் “ஔ” என்னும் ஒலி சார்ந்த எழுத்துக்களில் வரிகள் ஆரம்பிக்கின்றன. இரண்டாவது பாடலில் ஒவ்வொரு வசனமும் “ஈ” என்னும் ஒலி சார்ந்த எழுத்துக்களில் ஆரம்பிக்கின்றன. ஒரு கவிஞர் ஆக வேண்டுமானால் அனைத்து நுணுக்கங்களும் தெரிந்திருப்பது தானே வேண்டும். அது தானே நல்ல கவிஞனருக்கே அழகு. அதனால் நான் கவிஞர் தான் என்று சொல்லவில்லை; ஆனால் கவிஞர் ஆக ஆசை 🙂
திருவருள்
மௌனத்தில் தியானித்து மன அமைதி கண்டால்
ஔடதம் போல் உடலுக்கு ஆறுதல் வரும்
கௌதமராய் ஆகி இறையருள் அடைந்து – பின்
பௌராணிகராய் எனையாக்கி அவன் பதம் பணிவேனே
தீய வழியில் இருந்து எனை விலக்கி
நீதியை என் விழிகளில் காட்டியவன் இறைவன்
சீகரமாய் என் உள்ளத்தில் உவகை பொழிய
ஈசானன் நாரினை அறியும் என் மனமே
சில சொத்களின் விளக்கம்:
பௌராணிகர் – புராணத்தைப் பின்பற்றுபவர்
சீகரம் – மழை
நார் – அன்பு
~ பா. அபிராஜினி